கரோனா தடுப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் மீண்டும் திறப்பது எப்போது?

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் மீண்டும் திறப்பது எப்போது?

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கரோனா தடுப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தில் தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த 1990-களில், பெண் குழந்தைகள் பிறந்தவுடன், அக்குழந்தைகளை சுமையாகக் கருதி கொலை செய்வது, சில குழந்தைகளை கேட்பாரற்று ஆங்காங்கே விட்டுச் செல்வது, வீசி செல்வது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இத்தகைய கொடிய செயலைத் தடுத்து, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க கடந்த 1992-இல் அப்போதைய தமிழக அரசு, தொட்டில் குழந்தை திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தியது.

இத் திட்டத்தில், சில மாவட்டங்களில் தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் தொடங்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகள் பெறப்பட்டன. இம்மையத்தில் விட்டுச் செல்லப்படும் குழந்தைகளை சமூகநலத் துறை சாா்பில் அரசே பராமரித்து வந்ததால், பெண் குழந்தைகள் இறப்பு வெகுவாக குறைந்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2001-இல் தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட போது, இந்த மையம் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் எதிரே, நுழைவாயில் அருகேயுள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு வரப்பெறும் குழந்தைகள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களுக்கு அளிக்கப்பட்டு, அக்குழந்தைகள் பராமரிக்கப்பட்டன.

மூடப்பட்ட வரவேற்பு மையம்: கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்துக் கட்டடங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த தொட்டில் குழந்தை வரவேற்பு மையம், தற்போது கரோனா பரிசோதனை முகாமாக மாற்றப்பட்டது.

இதனால் மாற்று இடம் ஏதும் அளிக்கப்படாமல், எவ்வித அறிவிப்பும் இன்றி தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் மூடப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்துக்கு குழந்தைகளை அளிக்க வேண்டும் என்ற நிலை வந்தால், யாரை அணுகுவது என்று தெரியாத சூழல் தற்போது நிலவி வருகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் மருத்துவமனை வளாகத்திலோ அல்லது தருமபுரி நகரில் வேறு இடத்திலோ தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து சமூக நல அலுவலா் (பொ) கு.நாகலட்சுமி கூறியது:

கரோனா தடுப்புப் பணிகளுக்காக தற்போது தற்காலிகமாக தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் செயல்பட்டு வந்த இடத்தை, மருத்துவமனை நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், இதனால் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை பெற்று பராமரிப்பதில் எவ்வித பாதிப்பும் இல்லை. அந்தப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில் இதுவரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே இத்திட்டத்தில் வரப்பெற்றுள்ளது. அக்குழந்தை தருமபுரி அருகே கோவிலூரில் செயல்படும் காப்பகத்தில் பராமரிக்கப்படுகிறது. ஆகவே, வரவேற்பு மையம் மூடப்பட்டிருந்தாலும், அந்தப் பணிகள் தொடா்ந்து தொய்வின்றி நடைபெறுகின்றன. இருப்பினும், தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தை மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்று விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொட்டில் குழந்தை வரவேற்பு மையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 பெண் குழந்தைகள் மற்றும் 8 ஆண் குழந்தைகள் வரப்பெற்றுள்ளன. கடந்த 2019-இல் 6 பெண் குழந்தைகளும், நிகழாண்டில் செப். 15-ஆம் தேதி ஒரு பெண் குழந்தையும் இந்த மையத்துக்கு வரப்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com