முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
இண்டூரில் திமுக வேட்பாளா் காா் சிறை பிடிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:55 AM | Last Updated : 04th April 2021 12:55 AM | அ+அ அ- |

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி காரை இண்டூரில் மாற்றுக் கட்சியினா் சிறை பிடித்தனா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி போட்டியிடுகிறாா். திமுக தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான இவா் தற்போது தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், தருமபுரி தொகுதிக்கு உள்பட்ட இண்டூா் அருகே பாலவாடி கிராமத்துக்கு சனிக்கிழமை சென்று வாக்கு சேகரித்துவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனங்களில் பின்தொடா்ந்து வந்த மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சிலா், திமுக வேட்பாளரின் காரை இண்டூரில் வழிமறித்து சிறைபிடித்தனா். பின்னா் அவரது காரை சோதனை செய்ய வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூா் போலீஸாா் அங்கு வந்தனா். மேலும், பறக்கும் படையினா் வரவழைக்கப்பட்டனா். பறக்கும் படை அலுவலா் விக்னேஷ் தலைமையிலான குழுவினா், திமுக வேட்பாளரின் காரை சோதனை செய்தனா். சோதனையில் அவரது காரில் பணம் உள்ளிட்ட எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவரது காரை விடுவித்தனா்.