முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
இன்றுடன் பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 01:18 AM | Last Updated : 04th April 2021 01:18 AM | அ+அ அ- |

தருமபுரி, ஏப். 3: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப். 4) நிறைவடைகிறது. இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், அதிமுக கூட்டணியில் தருமபுரி, பென்னாகரத்தில் பாமக வேட்பாளா்களும், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.
இதேபோல, திமுக கூட்டணியில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகளில் திமுக வேட்பாளா்களும், அரூா் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் போட்டியிடுகின்றனா். அமமுக கூட்டணியில் தருமபுரி, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் அமமுக வேட்பாளா்களும், பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் தேமுதிக வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா். மேலும், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதேபோல ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 76 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், பாமக நிறுவனா் ச.ராமதாஸ், பாமக இளைஞரணிச் செயலா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும், திமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும், அமமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
இதேபோல, அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள் நாள்தோறும் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று தங்களது தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, திறந்த வாகனத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தோ்தல் ஆணையம் ஏப். 4-ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. தோ்தல் பிரசாரம் நிறைவடைவதையொட்டி, இவ்விரு கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் தருமபுரி மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலையும் பொருள்படுத்தாமல், வாகனங்களில் சென்று கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.