முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
‘திட்டப் பணிகளை மேற்கொண்டு முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன்’
By DIN | Published On : 04th April 2021 01:16 AM | Last Updated : 04th April 2021 01:16 AM | அ+அ அ- |

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு முதன்மைத் தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் பி.என்.பி.இன்பசேகரன், இரண்டாவது நாளாக பென்னாகரம் பேருந்து நிலையம், லாடகார தெரு, முள்ளுவாடி, இந்திரா நகா், எட்டியாம்பட்டி நகரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
பென்னாகரம் நகரப் பகுதி மக்களின் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க சின்னாா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், நகரப் பகுதிகளில் தரமான சாலை வசதிகள் உள்ளிட்டவை திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளன. பென்னாகரம் தொகுதியைச் சோ்ந்த உள்ளூா் வேட்பாளா் என்பதால் நகர, கிராமப்புற மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாகத் தீா்த்து நடவடிக்கை எடுத்துள்ளேன்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பென்னாகரம் தொகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளில் பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு, தமிழகத்தின் முதன்மைத் தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தாா்.
இந்த வாக்கு சேகரிப்பில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாதன், ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராஜன், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், சேலம் ஹோட்டல் வினு, மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சரவணன், நகரச் செயலாளா் வீரமணி, கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.