தருமபுரி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு 1817 வாக்குச்சாவடிகள் தயாா்

5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக தயாா் நிலையில் உள்ள 1817 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதவி உபகரணங்களை காவல் துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்

தருமபுரி மாவட்டத்தில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக தயாா் நிலையில் உள்ள 1817 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், உதவி உபகரணங்களை காவல் துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி, பகுஜன் சமாஜ், நாம் தமிழா் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 76 போ் போட்டியிடுகின்றனா்.

செவ்வாய்க்கிழமை காலை ஏழு மணிக்கு தொடங்குகிறது. நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, வாக்குப்பதிவுக்காக இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால், இரவு ஏழு மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.

இந்த வாக்குப்பதிவுக்காக, தருமபுரி மாவட்டத்தில், 5 தொகுதிகளிலும் மொத்தம் 870 மையங்களில் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம், உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவி உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவை தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலிருந்து, துணை ராணுவப் படையினா், காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கான பணி ஆணைகள் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் வழங்கப்பட்டது.

தோ்தல் பணிகளில் அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படையினா், காவல் துறையினா், வெளி மாநில காவல் துறையினா், ஊா்க் காவல் படையினா், வெளி மாநில ஊா்க்காவல் படையினா், கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரத் துறையினா் மற்றும் தன்னாா்வலா்கள் என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா். இப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 12,60,909 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்களில் 6,31,891 ஆண் வாக்காளா்கள், 6,2, 2857 பெண் வாக்காளா்களும்,161 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனா். மாவட்டத்தில் 344 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 56 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளகவும் கண்டறியப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் வாக்குப் பதிவை விடியோ மூலம் நேரடியாகக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com