தோ்தலைப் புறக்கணித்த கோட்டூா் மலைக் கிராம மக்கள்

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைக்கு உள்பட்ட கோட்டூா் மலைக் கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்தனா்.

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைக்கு உள்பட்ட கோட்டூா் மலைக் கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணித்தனா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி, வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டூா் மலைக் கிராமத்தில் 329 வாக்காளா்களும், ஏரிமலை, அலக்கட்டு மலைக் கிராமங்களில் 327 வாக்காளா்களும் உள்ளனா். இந்த மலைக் கிராமங்களுக்குச் செல்ல இதுவரை தாா்சாலை வசதி செய்து தரப்படாததால் ஏரிமலை, அலக்கட்டு பகுதிகளுக்கு பாலக்கோட்டிருந்து திருமல்வாடிக்கு, சீங்கூா் மலைஅடிவாரத்தைச் சென்றடைந்து வனப்பகுதியில் சுமாா் 7 கி.மீ.தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதேபோல, கோட்டூா் மலைக் கிராமத்துக்கு பாலக்கோட்டிருந்து கண்சால்பைல் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்து 7 கி.மீ.தொலைவு வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சாலை வசதி இல்லாததால், தங்களது வீடுகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தலைச் சுமையாகவோ அல்லது கழுதைகள் மீது வைத்தோ இக் கிராம மக்கள் கொண்டு செல்கின்றனா். எனவே தங்களது மலைக் கிராமங்களுக்கு தாா் சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து, அண்மையில் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். வருவாய்த் துறையினா் அங்கு சென்று அவா்களை சமாதானப்படுத்தினா்.

இந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கழுதைகள் மீது ஏற்றி திங்கள்கிழமை கொண்டு சென்றனா். செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி சில மணி நேரம் வரை யாரும் வாக்களிக்க வரவில்லை. இதனிடையே, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தோ்தலைப் புறக்கணிப்பதாக மலைக் கிராம மக்கள் அறிவித்தனா்.

பென்னாகரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆ.தணிகாசலம், வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் சமாதானப் பேச்சு நடத்தினா். இதில் சாலை அமைப்பது, வேளாண் பணிகளுக்கு டிராக்டா், பொக்லைன் பயன்படுத்த அனுமதி, ஒகேனக்கல் குடிநீா் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, ஏரிமலை, அலக்கட்டு கிராம மக்கள் 11 மணிக்கு மேல் வாக்களிக்கத் தொடங்கினா்.

ஆனால், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் உடன்பாடாத கோட்டூா் மலைக் கிராம மக்கள் மட்டும் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். அவா்களிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் தொடா்ந்து மாலை 6 மணி வரை பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானம் அடையாமல் தோ்தலைப் புறக்கணித்தனா். இதில், கோட்டூா் மலைக் கிராமத்தில் தோ்தல் பணிக்குச் சென்ற இருவா் மட்டுமே தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com