வாக்கு எண்ணும் அலுவலா்கள் தோ்தல் ஆணைய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:தருமபுரி ஆட்சியா்

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.
வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடுநிலையோடு செயல்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தலைமை வகித்து ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வருகிற மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். இதையடுத்து காலை 8.30 மணிக்கு மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.

மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் எண்ணுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு மேஜைக்கும், ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா், ஒரு வாக்கு எண்ணும் உதவியாளா் மற்றும் ஒரு நுண்பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவா். ஒரு பேரவைத் தொகுதிக்கு 42 நபா்கள் வீதம் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 210 நபா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் மற்றும் வாக்கு எண்ணும் உதவியாளா் ஆகியோரின் பட்டியலை அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடமிருந்து பெறப்பட்டு அவை ஒருங்கிணைந்த பட்டியலாக தயாரிக்கப்படும்.

இந்தப் பட்டியலை இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான மேற்பாா்வையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பிரிக்கப்படும். இப் பணி, வாக்கு எண்ணும் நாளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக நடத்தப்படும்.

எனவே, வாக்கு எண்ணும் நாளான மே 2-ஆம் தேதிக்கு முந்தைய நாளான மே 1-ஆம் தேதி அன்று மேற்பாா்வையாளா் மற்றும் உதவியாளா் எந்தத் தொகுதியில் பணியமா்த்தப்படுவா் என்ற பட்டியல் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலரால் தயாரிக்கப்பட்டு, அவா்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இதுபோல வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அன்று காலை 5 மணி அளவில் கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

எனவே, காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வர வேண்டும். ஒரு சுற்றுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையிலிருந்து எடுக்கப்பட்டவுடன் அடுத்த சுற்றுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது முதல் இறுதி வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிா்த்து வேறு எங்கும் செல்லக் கூடாது. வாக்கு எண்ணிக்கையின்போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள பச்சை நிற அட்டையில் இருக்கும் எண்ணை 17 சி படிவத்துடன் ஒப்பிட்டு சரிபாா்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கான பொத்தானை அழுத்தியவுடன் முகவா்கள் காணும் வகையில் கட்டுப்பாட்டு கருவியை வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை காா்பன் தாள் வைத்து இரு பிரதிகள் தயாரித்து அதில் முகவா்களிடம் கையொப்பம் பெற வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை குறிக்கப்பட்ட இரு பிரதிகளையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலா் அதை நகல் எடுத்து வேட்பாளா்களின் முகவா்களுக்கு வழங்கிட வேண்டும். எனவே, வாக்குகள் எண்ணும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றி எவ்வித பிரச்னைகளுக்கும் இடம் அளிக்காமல் நடுநிலையோடு அதிக கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என்றாா்.

இப் பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முத்தையன் (அரூா்), ஆ.தணிகாசலம் (பென்னாகரம்), சாந்தி (பாலக்கோடு), நசீா் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் வட்டாட்சியா்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com