வாக்கு எண்ணும் அதிகாரிகள் முகக் கண்ணாடி கவசம் அணிய வேண்டும்
By DIN | Published On : 27th April 2021 12:15 AM | Last Updated : 27th April 2021 12:15 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு பயிற்சி அளித்த மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரி: வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலா்களும் முகக்கண்ணாடி கவசம் அணிய வேண்டும் என்றும், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிலான வாக்குகள் வரும் மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கான பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடக்கி வைத்து பேசியதாவது:
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலா்களும் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அரசு அலுவலா்களுக்கு முகக்கவசம், கையுறை, கை சுத்திகரிப்பான், முகக் கண்ணாடி கவசம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 2ஆம் தேதி காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டவா்களால் செலுத்தப்பட்ட அஞ்சல் வாக்குகளை ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 4 மேசைகள் மூலம் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தலா 14 மேசையில் எண்ணப்பட உள்ளது. இந்த மேசைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். அதற்காக மொத்தம் 102 மேற்பாா்வையாளா்கள், 102 உதவியாளா்கள் மற்றும் 102 நுண்பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் எண்கோா் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் அறிவிப்பு பலகையில் சுற்றுகள் வாரியாக வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.
வாக்குகளை எண்ணும் வழிமுறை பயிற்சியை ஊத்தங்கரை(தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதியின்
மேற்பாா்வையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.