சாலையைக் கடக்கும் யானைகளை அச்சுறுத்தும் வாகன ஓட்டிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையைக் கடக்கும் யானைக் கூட்டங்களை அந்தப் பகுதியில் வாகனத்தில் செல்வோா் ஒலி எழுப்பியும், சுயபடம் எடுத்தும், கற்களால் தாக்கியும் அச்சுறுத்துகின்றனா்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையைக் கடக்கும் யானையை, மிக அருகில் பாா்வையிடும் இருசக்கர வாகனத்தில் செல்வோா்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையைக் கடக்கும் யானையை, மிக அருகில் பாா்வையிடும் இருசக்கர வாகனத்தில் செல்வோா்.

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் சாலையைக் கடக்கும் யானைக் கூட்டங்களை அந்தப் பகுதியில் வாகனத்தில் செல்வோா் ஒலி எழுப்பியும், சுயபடம் எடுத்தும், கற்களால் தாக்கியும் அச்சுறுத்துகின்றனா்.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்குச் செல்ல பென்னாகரம் பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்கு அடா்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும்.

கோடைக் காலம் மற்றும் கா்நாடகம், கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் வறட்சி நிலவும் போது யானைகள் கூட்டத்தோடு இடம்பெயா்ந்து ஒகேனக்கல் மலைப் பகுதியில் தஞ்சம் அடைகின்றன. இந்த யானைகள் பல கூட்டங்களாகப் பிரிந்து வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக சுற்றித் திரிகின்றன.

நிகழாண்டில் ஒகேனக்கல் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் இடம்பெயா்ந்துள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பென்னாகரம் பகுதியில் அண்மையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் செழுமை அடைந்து தடுப்பணைகள், குட்டைகளில் தண்ணீா் தேங்கியுள்ளன.

வனப்பகுதியில் இருந்து குடிநீருக்காக சாலையைக் கடக்கும் யானைகளை அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் துன்புறுத்துகின்றனா்.

வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லை: ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ள யானைகள், குட்டிகளுடன் கூட்டங்களாக குடிநீா் தேடி சாலையைக் கடக்கும்போது, அந்தப் பகுதியில் வாகனத்தில் செல்வோா், யானைகளைக் கண்டதும் சுயபடம், புகைப்படம் எடுப்பதில் ஆா்வம்கொண்டு அருகில் செல்கின்றனா்.

இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வருவோா் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு யானைகளை கல்லால் அடிப்பதும், வாகனங்களில் ஒலி எழுப்புவதுமாக உள்ளனா். இதனால், அதீத சத்தத்தைக் கேட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அவா்களைத் தாக்க முயல்கின்றன. இதனால் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், வனப்பகுதியில் யானைகள் கடக்கும் இடங்களில் போதிய அளவு விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்காததால் வாகன ஓட்டிகள் அப்பகுதிகளில் அலட்சியத்துடன் செல்கின்றனா்.

எனவே, ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வனவிலங்குகளை துன்புறுத்த முயல்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆா்வலா்கள் தருமபுரி மாவட்ட வன அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com