ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
By DIN | Published On : 04th August 2021 08:12 AM | Last Updated : 04th August 2021 08:12 AM | அ+அ அ- |

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து, சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான மண்பாண்டத் தொழிலாளா்கள் உள்ளனா். இவா்கள் ஏரிகளில் மண் எடுத்து வந்து மண்பாண்டங்களை தயாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இவா்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தற்போது மறுக்கப்படுவதாக தெரிகிறது. எனவே, ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, ஏரிகளில் மண் எடுக்க மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். செங்கல் தயாரிக்கும் தொழிலாளா்களுக்கு பட்டா நிலத்தில் மண் எடுக்கவும், விவசாய பயன்பாட்டுக்காக ஏரியில் மண் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.