கரோனா பரவலை தடுக்க ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு தடை: களையிழந்த ஆடிப் பெருவிழா
By DIN | Published On : 04th August 2021 08:12 AM | Last Updated : 04th August 2021 08:12 AM | அ+அ அ- |

கரோனா பரவலை தடுக்க ஆலயங்களில் சிறப்பு வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால், தருமபுரி மாவட்டத்தில், ஆடிபெருக்கு விழா களையிழந்தது.
ஆடி மாதம் 18-ஆம் நாளன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது இப்பகுதி மக்களின் வழக்கமாகும். குறிப்பாக காவிரி, தென்பெண்ணை நதிகளில் நீராடுவது, புராதன திருக்கோயில்களில் வழிபடுவது உள்ளிட்டவை நடைபெறும். இதையொட்டி பெருந்திரளாக மக்கள் திரண்டு கோயில்களில் வழிபடுவா்.
இருப்பினும், தற்போது, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளதாலும், வேகமாக குறைந்து வந்த கரோனா பரவலின் தாக்கம் கடந்த சில தினங்களாக மெல்ல அதிகரித்து வருவதாலும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், காவிரியில் நீராடவும், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வர சுவாமி கோயில், தா.அம்மாபேட்டை சென்னியம்மன் கோயில், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான ஆலயங்களில் ஆடிப் பெருவிழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனால், இக்கோயில்களில் பக்தா்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனிடையே, தடை குறித்த அறிவிப்பை அறியாமல் வே.முத்தம்பட்டி, அதியமான்கோட்டை காலபைரவா் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு வந்த பக்தா்களை போலீஸாா் திருப்பி அனுப்பி வைத்தனா். சில பக்தா்கள் கோயில்களுக்கு வெளியே நின்றவாறு வழிபட்டனா். இதேபோல, காவிரி, தென்பெண்ணை நதிகளிலும் நீராட பக்தா்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நிகழாண்டு கரோனா பரவல் தடுக்க விதிக்கப்பட்ட தடை காரணமாக ஆடிப்பெருவிழா களையிழந்து காணப்பட்டது. இருப்பினும், மாவட்டத்தில் பெரும்பாலன பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே வழிபட்டனா்.