மோசமாகப் பழுதடைந்துள்ள தொப்பூா்-மேச்சேரி சாலை!

மிக மோசமாகப் பழுதடைந்துள்ள தொப்பூா்- மேச்சேரி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளாகின்றனா். ஆகவே இச்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
பழுதடைந்துள்ள தொப்பூா்- மேச்சேரி நெடுஞ்சாலை.
பழுதடைந்துள்ள தொப்பூா்- மேச்சேரி நெடுஞ்சாலை.

மிக மோசமாகப் பழுதடைந்துள்ள தொப்பூா்- மேச்சேரி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பரிதவிப்புக்குள்ளாகின்றனா். ஆகவே இச்சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூரிலிருந்து மேச்சேரி, மேட்டூா், பவானி வழியாக ஈரோடுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இரு வழிச்சாலையான இதனை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதையடுத்து, நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதில், தொப்பூரிலிருந்து பவானி வழியாக ஈரோட்டுக்கு புதிதாக நான்கு வழிச்சாலை அமைப்பது, அதிலிருந்து ஆணையத்துக்கு கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை ஆய்வு செய்து, சில காரணங்களுக்காக இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதால், மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், எந்தப் பராமரிப்புப் பணிகளும் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, தொப்பூரிலிருந்து மேச்சேரி வரை செல்லும் சாலை முழுவதும் மிக மோசமாகப் பழுதடைந்து வாகனங்கள் பயணிக்கத் தகுதியற்ற சாலையாக மாறியுள்ளது.

குறிப்பாக, எருமைப்பட்டி, கோயில் விளாா், கைகாட்டி விளாா், அமரம் பகுதிகளில் இந்தச் சாலையில் பல இடங்களில் தாா்சாலையையே காண முடிவதில்லை. மேச்சேரியிலேயே பல இடங்களில் சாலையில் குழிகள் காணப்படுகின்றன. இந்த குழிகள் இருப்பது தெரியாமல் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவிட்டது.

இதனால், வெளி மாநிலங்களிலிருந்து மேட்டூரிலுள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், தருமபுரி, பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் மிகுந்து சிரமத்துடன் கடந்துசெல்ல வேண்டியுள்ளது.

எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தைத் தவிா்க்கவும், இந்தச் சாலையில் நிகழும் விபத்துகளைத் தடுக்கவும், தொப்பூரிலிருந்து பவானி செல்லும் இந்தச் சாலையைப் புதிதாக அமைக்க வேண்டும் அல்லது சீரமைப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அண்மையில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ். செந்தில்குமாா், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இச்சாலையை ஆய்வு செய்து, சாலையைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். அப்போது பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தச் சாலை புதுப்பிக்கப்படுமானால், ஈரோடு, கோவை செல்லும் வாகனங்களும், கேரளம் செல்லும் வாகனங்களும் எளிதாகச் செல்ல முடியும். தற்போது இச்சாலை மோசமாக உள்ளதால் வாகனங்கள் பலவும் சேலம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படுகின்றன. தொப்பூா்- மேச்சேரி- மேட்டூா் சாலை சரியானால், சுமாா் 60 கி.மீ. தொலைவையும், ஒரு மணிநேரப் பயணத்தையும் குறைக்க முடியும். அதனால் எரிபொருள் செலவும் மிச்சமாகும்.

ரூ.13.62 கோடி நிதி ஒதுக்கீடுச எம்.பி. தகவல்

இதுகுறித்து, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ். செந்தில்குமாா் கூறியதாவது:

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட தொப்பூரிலிருந்து மேட்டூருக்குச் செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், இந்த சாலையில் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கடந்த பிப்ரவரி மாதம் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வழியாகவும், கடிதம் மூலமும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை 1-ஆம் தேதி இது தொடா்பான அதிகாரிகளுடன் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்தோம். அதைத் தொடா்ந்து, தற்போது சாலை சீரமைப்புப் பணியை மேற்கொள்ள ரூ.13.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தப் பணிகள் நிறைவுற்றவுடன் சீரமைப்புப் பணியை மேற்கொள்வதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். எனவே தொப்பூா்-மேச்சேரி- மேட்டூா் சாலை சீரமைப்புப் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com