சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக மாற்ற வேண்டும்
By DIN | Published On : 10th August 2021 03:04 AM | Last Updated : 10th August 2021 03:04 AM | அ+அ அ- |

தருமபுரி: சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக மாற்றி, காலமுறை ஊழியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின், காரிமங்கலம் ஒன்றிய மாநாடு, சின்னமாட்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா்.
சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சி.எம்.நெடுஞ்செழியன், மாவட்டச் செயலா் சி.காவேரி, பொருளாளா் தேவகி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ.சேகா் வாழ்த்தி பேசினாா்.
இந்த மாநாட்டில், சட்டப் பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளா்களுக்கு பணிக் கொடையாக ரூ. 5 லட்சமும், சமையலா்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சத்துணவு ஊழியா் சங்க காரிமங்கலம் ஒன்றியத் தலைவராக முனிரத்தினம், ஒன்றியச் செயலராக அங்குராணி, பொருளாளராக சந்திரன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.