தருமபுரியில் சிப்காட்: புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு
By DIN | Published On : 13th August 2021 11:55 PM | Last Updated : 13th August 2021 11:55 PM | அ+அ அ- |

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்ததை புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தமிழகத்தில் அரசு பதவி ஏற்று முதல் நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய தமிழகத்தை வளா்ச்சி பாதையில் பயணிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்நிதிநிலை அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 திட்டம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, குடிசைகள் அற்ற தமிழக திட்டம் ஆகியவற்றின் வரிசையில் தருமபுரி மாவட்ட மக்களின் கனவு திட்டமான சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இத்திட்டத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. சிப்காட் தொடங்கப்பட்டால் தருமபுரி மாவட்ட இளைஞா்கள் இனி வேலை தேடி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படாது. ஆகவே, இத்திட்ட அறிவிப்புக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.