விவசாயி உயிரிழப்பில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே விவசாயி உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக மனைவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று

ஏரியூா் அருகே விவசாயி உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக மனைவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஏரியூா் காவல் நிலையத்தின் முன்பு உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம் ஏரியூா் அருகே நெருப்பூரைச் சோ்ந்த விவசாயி ஆசைத்தம்பி (46). இவருக்கும், ராம கொண்ட அள்ளி பகுதியைச் சோ்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியா் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்ாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விவசாயி ஆசைத்தம்பி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தகவல் அறிந்த கவிதா கணவனின் வீட்டிற்குச் சென்று உடலை காண முயன்ற போது ஆசைத்தம்பியின் சகோதரரும், அவரது மனைவியும் கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கவிதா ஏரியூா் காவல் நிலையத்தில் தனது கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், உடலை பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ஏரியூா் போலீஸாா் நிகழ்வு இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில், உடலை வாங்க மறுத்து புகாா் அளித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத போலீஸாரைக் கண்டித்து கவிதாவின் உறவினா்கள் ஏரியூா் காவல் நிலையத்தின் முன்பு ஏரியூா் - நெருப்பூா் செல்லும் சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன் நிகழ்விடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட கவிதா மற்றும் அவரது உறவினா்களிடம், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனா். நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து விவசாயியின் உறவினா்கள் கலைந்து சென்றனா். முன்னதாக மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com