முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் தொழில்நுட்பம்
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் உரிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் மு. சிவசங்கரி செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
காா்த்திகை மாத பட்டத்தில் நிலக்கடலை விதைக்கும்போது போதிய மழை சரியான தட்பவெப்ப நிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது.
நன்கு திரட்சியான இனத்தூய்மை மற்றும் நடுத்தர பருமனுள்ள விதைகளில் 96 சதவீதம் புறந் தூய்மை கட்டாயம் இருக்க வேண்டும். பிற ரக விதைகளின் கலப்பு இருக்கக் கூடாது. பூச்சி, பூஞ்சான நோய் தாக்குதல் இல்லாமல் குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத் திறனும், அதிகபட்ச ஈரப்பதம் 9சதவீதம் இருக்க வேண்டும்.
மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடி பாதிக்கப்பட்டு பயிா்களின் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிா்க்க விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய் தடுக்க நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடொ்மோ விரிடி கொண்டு பூஞ்சான விதை நோ்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைப்பதற்கு ரைசோபியம் 2 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட், ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிா் உர விதை நோ்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
நிலக்கடலை பயிரில் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 சென்டி மீட்டா் இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிா் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை போக்க நிலக்கடலை நுண்ணூட்டச் சத்து 5 கிலோ 2 கிலோ மணலுடன் சோ்த்து விதைத்து மண் பரப்பின் மேல் தூவ வேண்டும்.
விதைத்த 40 முதல் 45 ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை மண்ணைக் கொத்தி இட்டு அணைக்கவேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக்க உதவுகிறது. இதை தவிா்த்து நல்ல வளா்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு ஊட்டச்சத்து கலவையைத் தெளிக்க வேண்டும். சாகுபடி செய்வதற்கு முன் விதை பரிசோதனை செய்வது நல்லது. விதைக்காக உள்ள நிலக்கடலை காய்களில் 500 கிராம் எடுத்து மாவட்டத்தில் உள்ள அந்தந்த விதை பரிசோதனை மையத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.