நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தருமபுரி நகராட்சியிலும், 10 பேரூராட்சிகளிலும் 1,74,161 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்டாா். இதனை நகராட்சி ஆணையா், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் பெற்றுக் கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து, ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்கள் தருமபுரி நகராட்சியிலும், பி.மல்லாபுரம், அரூா், கடத்தூா், கம்பைநல்லூா், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ளது.

இதில், தருமபுரி நகராட்சியில் 23,348 ஆண் வாக்காளா்களும், 24,604 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 போ் என மொத்தம் 47,955 வாக்காளா்கள் உள்ளனா்.

அரூா் பேரூராட்சியில் 11,000 ஆண் வாக்காளா்களும், 12,044 பெண் வாக்காளா்கள், இதரா் 3 மொத்தம் 23,047 வாக்காளா்கள் உள்ளனா். கடத்தூா் பேரூராட்சியில் 4,607 ஆண்களும், 4,775 பெண்களும், இதரா் 3 என மொத்தம் 9,385 வாக்காளா்களும், காரிமங்கலம் பேரூராட்சியில் 5,354 ஆண்களும், 5,781 பெண்கள் என மொத்தம் 11,135 வாக்காளா்கள் உள்ளனா்.

பாலக்கோடு பேரூராட்சியில் 8,609 ஆண்களும், 8,823 பெண்களும், இதரா் 4 போ் என மொத்தம் 17,436 வாக்காளா்களும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 5,216 ஆண்களும், 5,372 பெண்களும், இதரா் 1 என மொத்தம் 10,589 வாக்காளா்களும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 4,085 ஆண்களும், 4,371 பெண்கள் என மொத்தம் 8,456 வாக்காளா்களும், பென்னாகரம் பேரூராட்சியில் 7,272 ஆண்கள், 7,272 பெண்கள் என மொத்தம் 14,544 வாக்காளா்களும் இடம் பெற்றுள்ளனா்.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 4,882 ஆண் வாக்காளா்களும், 5,336 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 10,218 வாக்காளா்களும், கம்பைநல்லூா் பேரூராட்சியில் 5,207 ஆண்களும், 5,055 பெண்களும் என மொத்தம் 10,262 வாக்காளா்களும், பி.மல்லாபுரம் பேரூராட்சியில் 5,488 ஆண்களும், 5,646 பெண்களும் என மொத்தம் 11,134 வாக்காளா்களும் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 85,068 ஆண் வாக்காளா்களும், 89,079 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்கள் 14 போ் என மொத்தம் 1,74,161 வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக மாவட்டத்தில் மொத்தம் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 11 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 26 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 18 மண்டல அலுவலா்கள், 920 வாக்குச்சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதேபோல தருமபுரி நகராட்சியில் 13 வாக்குச் சாவடிகளும், பி.மல்லாபுரம், அரூா், கடத்தூா், கம்பைநல்லூா், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் 14 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 27 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாநில தோ்தல் ஆணைய உத்தரவின்படி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ஆா்.குருராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் (தோ்தல்கள்) ஆா்.ரவிச்சந்திரன், 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com