பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி ஒப்பந்தப்புள்ளி விவகாரம்:திமுக, அதிமுக மோதல்

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் திமுக, அதிமுகவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் திமுக, அதிமுகவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட தமாணிக்கோம்பை, ஜி.எஸ். நகா் உள்ளிட்ட பகுதிகளில் பேவா் பிளாக் சாலை அமைக்க, தமிழ்நாடு நகா்ப்புற வளா்ச்சி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதில் பங்கேற்கும் ஒப்பந்ததாரா்களின் விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரையிலும் வரவேற்கப்பட்டன.

இதையடுத்து, அதிமுகவைச் சோ்ந்த சசிகுமாா் என்பவா், இந்த டெண்டரில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 1.30 மணியளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்றாா்.

அப்போது, அலுவலக வளாகத்தில் இருந்த திமுகவினா், சசிகுமாரை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றியும், அவா் கொண்டு வந்திருந்த டெண்டா் படிவத்தை வெளியில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக ஒன்றியச் செயலா் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியினா், திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் டெண்டா் போட வந்தவா்களை திமுகவினா் தடுத்து நிறுத்தியது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும் என்றும், மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் படிவங்களை போட டெண்டா் பெட்டி வைக்க வேண்டும் என்றும், ஆளும் திமுகவினருக்கு அரசு அதிகாரிகள் துணை நிற்கக் கூடாது என்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா்.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது :

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் திமுக, அதிமுகவினா் இடையே அலுவலகத்துக்கு வெளியே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. டெண்டா் போடுவது தொடா்பாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை. அரசு விதிகளின்படி முறையாக டெண்டா் நடைபெறும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com