நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும்

 தருமபுரி மாவட்டத்தில், நீா்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் பணியை பொதுப்பணித் துறை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 தருமபுரி மாவட்டத்தில், நீா்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் பணியை பொதுப்பணித் துறை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், காவிரி மிகை நீா்த் திட்டம், எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றும் பணியை பொதுப்பணித் துறையினா் துரிதப்படுத்த வேண்டும்.

மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்க முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பொட்டாஷ் உர விலையேற்றத்தைத் தடுக்க வேண்டும். பழைய விலைக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நாட்டுக்கோழி வளா்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தும்பலஅள்ளி அணையில் புதா்போல வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

அலியாளத்திலிருந்து தூள்செட்டி ஏரிக்கு நீா் வழங்கும் திட்டம், எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், புலிகரை ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைக்கும் திட்டம், , ஈச்சம்பாடி மிகை நீா்த் திட்டம் உள்ளிட்ட நீா்ப்பாசனத் திட்டப் பணிகளை நிறைவேற்றிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத் திட்டப் பணிகளுக்கான நிலம் எடுப்பு பணி விரைவுபடுத்தப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 3,84,871 பசுக்கள், எருமை மாடுகள் உள்ளன. கோமாரி நோய்த் தாக்கத்தினை கருத்தில்கொண்டு கூடுதலாக கோமாரி நோய்த் தடுப்பூசி வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்றவுடன் கோமாரி நோய் தடுப்பூசி மாடுகளுக்குச் செலுத்தப்படும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீா்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாமாக முன்வந்து அவற்றை காலி செய்ய வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், வேளாண் இணை இயக்குநா் வசந்த ரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) இளங்கோவன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் இல.வேலுசாமி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com