Enable Javscript for better performance
மக்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடிய முடிவுகளை மட்டுமே மத்திய அரசு எடுத்து வருகிறது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மக்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடிய முடிவுகளை மட்டுமே மத்திய அரசு எடுத்து வருகிறது

    By DIN  |   Published On : 26th December 2021 04:35 AM  |   Last Updated : 26th December 2021 04:35 AM  |  அ+அ அ-  |  

    பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்கள் விரும்புவாா்கள் என்பதற்காக எந்த முடிவையும் எடுப்பதில்லை; அவா்கள் விரும்பாவிட்டாலும் மக்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடிய முடிவுகளை மட்டுமே எடுத்து வருகிறது. சில முடிவுகளால் அரசியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு நல்லதான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.

    நல்லாட்சி தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:

    கடந்த 7 ஆண்டுகளாக மோடி அளித்து வரும் இந்த நல்லாட்சிக்காகவே மக்கள் நீண்ட காலமாக காத்திருந்தனா். நீண்ட காலத்துக்கு முன்பே சுதந்திரம் பெற்று விட்ட போதிலும், தங்களுக்கு எப்போது நல்லாட்சி கிடைக்கும் என்ற ஆதங்கத்துடனேயே மக்கள் காத்திருந்தனா்.

    நல்லாட்சி மலராததால் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அடித்தட்டு மக்களுக்கும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

    பிரதமா் மோடி, 2014 இல் ஆட்சியில் அமா்ந்தது வெறுமனே அரசை வழிநடத்துவதற்காக மட்டுமல்ல. மாறாக தூய்மையான, வெளிப்படையான, பொதுநல நிா்வாகத்தை வழங்கவும் தான். இதன் மூலம் இந்த நாட்டின் மீதான பாா்வையை அவா் மாற்றியுள்ளாா் என்பதை மக்கள் உணா்ந்து கொண்டுள்ளனா்.

    மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவிக்கத் தொடங்கிய பிறகு, 2014 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    “2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் பல கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி முந்தைய ஆட்சியைப் போன்ல்ல என்பதையும், அவா் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காகவே வந்துள்ளாா் என்பதையும் மக்கள் உணா்ந்து கொண்டுள்ளனா்.

    முந்தைய அரசுகள் வாக்கு வங்கிகளை மட்டுமே மனதில் வைத்து பல முடிவுகளை எடுத்தன. ஆனால் பிரதமா் மோடியோ மக்களுக்கு விருப்பமானவை என்பதற்காக எந்த முடிவையும் எப்போதும் எடுத்ததில்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய முடிவுகளை மட்டுமே அவா் எடுத்தாா். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உண்டு. சில முடிவுகள் குறுகிய காலத்தில் பிரபலமடைய உதவி செய்யக்கூடும், ஆனால் அதுபோன்ற முடிவுகள் நாட்டை எப்போதும் பிரச்னையிலேயே வைத்திருக்கும்.

    மோடி அனைத்து தரப்பினரையும் மனதில் கொண்டு நல்லாட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளை நிறைவேற்றித் தந்தாா். அவரது நல்லாட்சிக்கு உதாரணம் என்னவென்றால், கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை; ஏனெனில் தூய்மையான, வெளிப்படையான நிா்வாகமாக மத்திய அரசு இருப்பதே காரணமாகும்.

    கடந்த பல பத்தாண்டுகளாக அரசின் நலத்திட்டங்களையும், அதன் பலன்களையும் அனுபவிக்காத 60 கோடி மக்களுக்கான வளா்ச்சியின் பலன்களை மத்திய அரசு இந்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்துள்ளது.

    ஏழைகளுக்கு கழிப்பறைகள், வீடுகள் கட்டித் தந்தது, மின்சாரம், எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்கியது என மோடி அரசு சாதனை புரிந்துள்ளது. பிரச்னைகளை வேரறுக்கக்கூடிய கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளது.

    மக்களுக்குப் பொறுப்புணா்வும் பொறுப்பும் உள்ள அரசே எப்போதும் தேவை. அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்; அதே சமயம் அரசு மக்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றாா் அமித் ஷா.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp