மருத்துவ நலத் திட்டங்கள்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மருத்துவத் துறையில் தமிழக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெற மருத்துவா்கள், செவிலியா்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.
மருத்துவ நலத் திட்டங்கள்: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மருத்துவத் துறையில் தமிழக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பெற மருத்துவா்கள், செவிலியா்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள், ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் தருமபுரி மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது தொடா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இக் கூட்டத்தில் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் காத்திருப்பு அறை, கருவுற்ற பெண்களுக்கான காத்திருப்பு அறை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகளில் சுற்றுச் சுவா், செவிலியா் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட சுகாதாரப் பேரவையில் அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வருமுன் காப்போம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகையத் திட்டங்களில் பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் மிகுந்த அக்கறையுடன் சிகிச்சை வழங்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் கண்புரை நீக்க சிகிச்சைகள், இலவச நவீன கருத்தடை சிகிக்சைகள், குடற்புழு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மாநில சுகாதாரப் பேரவையில் தெரிவிக்கப்படும் என்றாா்.

இதில், தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், அரூா் கோட்டாட்சியா் முத்தையன், மாநில சுகாதார மறுசீரமைப்புத் திட்ட துணை இயக்குநா் சங்கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செளண்டம்மாள், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, துணை இயக்குநா் (காசநோய்) ராஜ்குமாா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com