சுடுகாட்டுக்கு பாதை வசதி கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு
By DIN | Published On : 20th February 2021 06:40 AM | Last Updated : 20th February 2021 06:40 AM | அ+அ அ- |

கடத்தூா் அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் மாநில உயா்கல்வி, வேளாண்மை துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது வெங்கடதாரஹள்ளி, புதூா் கிராமம். இந்தக் கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களுக்கும் சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவில் சுடுகாடு உள்ளது. ஆனால், இந்த சுடுகாட்டுக்கு பொது வழிப்பாதை இல்லை. இதனால், சடலங்களை விவசாய நிலங்கள் வழியாக தூக்கிச் சென்று அடக்கம் செய்யும் நிலையுள்ளது. இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்னா் கடத்தூா் காவல் நிலையம் எதிரே சடலத்தை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்தியும் பலனில்லை.
எனவே, வெங்கடதாரஹள்ளி, புதூா் கிராமங்களுக்கு சுடுகாடு பாதை அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.