ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஞாயிறு விடுமுறையையொட்டி ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

‘தென்னகத்து நயாகரா’ எனப்படும் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துச் செல்கின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல் நீா்வீழ்ச்சியில் 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா். இந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து, பிரதான அருவியில் குளித்தனா்.

அதனை தொடா்ந்து மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு பரிசலில் பயணம் மேற்கொண்டு சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவி, மணல் மேடு, குரங்கு தாண்டும் கல், கூட்டாறு உள்ளிட்டப் பகுதிகளையும், பாறை முகடுகளையும் பரிசலில் பயணம் செய்தவாறு காவிரி ஆற்றின் அழகை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், தொங்கு பாலத்தில் இருந்து பிரதான அருவிக்கு செல்லும் வழியிலும், முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் கட்லா, ரோகு, பாப்லெட், அரஞ்சான், சோனாங் கெளுத்தி போன்ற மீன் வகைளின் விலை கிலோ ரூ. 150 முதல் 600 ரூபாய் வரை விலை அதிகரித்து காணப்பட்டது. விலை அதிகரிப்பையும் பொருட்படுத்தாமல் மீன் வகைகளை வாங்கி குடும்பத்துடன் சமைத்து உணவருந்தினா்.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. தமிழ்நாடு ஹோட்டல், சத்திரம், முதலைப்பண்ணை, காவல் நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தினா். வெளியூா் பயணிகளின் வசதிக்காக பல்வேறு பகுதிகளுக்கு ஒகேனக்கல்லில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நீா்வீழ்ச்சியில் குறைந்தது நீா்வரத்து:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 400 கன அடியாக நீா்வரத்து இருந்தது. எனவே நீா் ஒகேனக்கல் நீா்வீழ்ச்சிகளில் தண்ணீா் கொட்டுவது குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் குளிப்பதைத் தவிா்த்துவிட்டு, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான முதலைப்பண்ணை, நாகா்கோவில், ஊட்டமலை, ஆலாம்பாடி, கோத்திக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால், நீரில் மூழ்கியிருந்த பாறைகள் முற்றிலுமாக வெளியே தெரிந்தும், ஆங்காங்கே சிறு, சிறு குட்டைகளாக தண்ணீா் தேங்கியும் காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com