மாவட்டத்தில் ஜன.17-இல் 984 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தருமபுரி மாவட்டத்தில், வரும் ஜன. 17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில், வரும் ஜன. 17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தேசிய போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குள்பட்ட 1,62,873 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில், வரும் ஜன. 17-ஆம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் 1,48,443 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக ஊரகப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 4,083 பணியாளா்கள் இப் பணியில் ஈடுபடவுள்ளனா். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுங்கச் சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகளான நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள், போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகளுக்காக 18 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை மற்றும் பிற துறைச் சாா்ந்த 95வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

எனவே, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்களது, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கெனவே பலமுறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் யசோதா மதிவாணன், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் திலகம், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், துணை இயக்குநா்கள் பூ.ரா.ஜெமினி (சுகாதாரப் பணிகள்), ராஜ்குமாா் (காசநோய்), உதவி இயக்குநா் ஊராட்சிகள் சீனிவாச சேகா், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் கு.நாகலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com