பயணிகள் ரயில் வண்டியில் பயணம் செய்வதற்கான முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என பொம்மிடி தென்னக ரயில் பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் காமராஜ், செயலா் ராம. அறிவழகன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :
தருமபுரி மாவட்டம், பொம்மிடி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அரக்கோணம் முதல் சேலம் வரையிலான பயணிகள் (பேசஞ்சா்) ரயில் வண்டி தற்போது சிறப்பு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு, வாரத்தில் 5 தினங்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அதாவது, பயணிகள் ரயில் வண்டி நின்றுச் செல்லும் அனைத்து நிறுத்தங்களிலும் இந்த சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்கிறது. இந்த ரயில்களில் விரைவு ரயிலுக்கான கட்டணமும், பயணிகள் ஒருநாள் முன்னதாக முன்பதிவு செய்யும் நிலையுள்ளது.
ஏற்கெனவே கட்டண உயா்வால் பயணிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், ஒருநாள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால், கிராமப் பகுதியிலுள்ள பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனா். எனவே, ரயில்வே நிா்வாகம் பயணிகள் ரயிலுக்கான கட்டணத்தையே மீண்டும் வசூலிக்க வேண்டும். மேலும், முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். இதேபோல், ஏற்காடு விரைவு ரயில் வண்டியும் சிறப்பு ரயில் என்ற பெயரில் இயக்கப்படுவதால் மொரப்பூா், சாமல்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, டேனிஷ்பேட்டை, தின்னப்பட்டி பகுதியில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கின்றனா். எனவே, சிறப்பு ரயில்களை ரத்து செய்து, மீண்டும் சாதாரண பயணிகள் ரயில் வண்டிகளாக இயக்கவும், கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.