பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனையாயின.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகள் நல்லம்பள்ளி, காரிமங்கலம் வாரச் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இந்த ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக பொதுமக்கள் ஏராளமானோா் காலை 5 மணியிலிருந்தே சந்தையில் கூடினா். குறைந்த பட்சமாக ரூ. 5 ஆயிரத்தில் தொடங்கி ஆடுகளின் எடையைப் பொருத்து அதிக பட்சமாக ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த மக்கள், தங்களுக்குத் தேவையான ஆடுகளை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்ட ஆடுகளும் நண்பகலுக்குள் விற்பனையாயின. ஆடுகளை வாங்குவதற்காக வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் இவ் விரு ஊா்களிலும் நடைபெற்ற ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய இரு வாரச் சந்தைகளிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.