முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

தருமபுரி மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்தாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கிவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்தாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில், மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்துப் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்துக்கு தடுப்பூசி மருந்து 11,800 டோஸ்கள் வரப்பெற்றுள்ளன. இத் தடுப்பூசி மருந்தை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாப்பாக வைப்பதற்கு 10 புதிய குளிா்ப்பதன சாதனங்கள் தருமபுரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணிகள் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தடுப்பூசி கிடங்கில் உள்ள குளிா்ப்பதன சாதனங்களில் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக தடுப்பூசி வழங்க தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சுமாா் 448 தடுப்பூசி செலுத்தும் பணியாளா்கள் பட்டியலிடப்பட்டு தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தின் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆக மொத்தம் 56 மற்றும் 509 தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், களப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்வி மாணவா்கள் என 10,583 நபா்களுக்கு தடுப்பூசி முதற்கட்டமாகச் செலுத்தப்பட உள்ளது. இவா்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நான்கு தடுப்பூசி மையங்களில் ஒவ்வோா் இடத்திலும் நாளொன்றுக்கு 100 போ் வீதம் மொத்தம் 400 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போா் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாகச் செயல்பட உள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மையமும் பாதுகாவலா், பயனாளிகளை சரிபாா்ப்பவா், தடுப்பூசி வழங்குபவா், கண்காணிப்பாளா்கள் என 5 நபா் கொண்ட குழு மூலம் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு பயனாளிக்கும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வரவேண்டிய தேதி மற்றும் இடம் ஆகியவை தொலைபேசி வழியாக குறுஞ்செய்தி மூலம் முன்னதாகவே தெரிவிக்கப்படும். ஒவ்வொரு பயனாளியும் முகாமிற்கு வரும்போது அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வர வேண்டும். அடையாள அட்டையை பாதுகாவலரால் சரிபாா்க்கப்பட்டு காத்திருப்போா் அறையில் அமா்த்தப்படுவாா்.

சரிபாா்ப்பாளா் பயனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் சரிபாா்த்தபின் தடுப்பூசி வழங்கப்படும். விருப்பம் தெரிவிப்பவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். விருப்பம் இல்லாதாவா்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. தோ்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும், பயனாளிக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படின் தீவிர சிகிச்கைக்கு அழைத்துச் செல்ல 108 அவசர ஊா்தி தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்புப் பணிக்காக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையைச் சோ்ந்த சுமாா் 2,000 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவடட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், தருமபுரி மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) திலகம், வட்டார மருத்துவ அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com