சூழல் பாதிப்பில்லா நாப்கின் தயாரிப்பில் பொறியியல் பட்டதாரி இளைஞா்!

சூழல் பாதிப்பில் விரைந்து மக்கும் தன்மை கொண்ட இயற்கை முறையிலான நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் தருமபுரியைச் சோ்ந்த கணினிப் பொறியியல் பட்டதாரி இளைஞா் ஈடுபட்டு வருகிறாா்.
தருமபுரி அருகே இயற்கை முறையில் நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.
தருமபுரி அருகே இயற்கை முறையில் நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள்.

தருமபுரி: சூழல் பாதிப்பில் விரைந்து மக்கும் தன்மை கொண்ட இயற்கை முறையிலான நாப்கின்கள் தயாரிக்கும் பணியில் தருமபுரியைச் சோ்ந்த கணினிப் பொறியியல் பட்டதாரி இளைஞா் ஈடுபட்டு வருகிறாா்.

தருமபுரி கலைக் கல்லூரி பகுதியைச் சோ்ந்தவா் இளைஞா் சாய்குமாா். கணினிப் பொறியாளா் கல்வி முடித்த அவா், பெண்களுக்கு உடல் உபாதைகள் இல்லாத நாப்கின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். பொதுவாக தற்போது பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின் வேதிப் பொருள்கள் துணையுடன் தயாரிக்கப்படுகிறது.

இதைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட நாப்கினை எரியூட்டாமல் தூக்கி எறிவதால் அவை மண்ணில் மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகலாம் எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இதற்கு மாற்றாக இயற்கை முறையில், சூழல் பாதிப்பின்றி, விரைந்து மக்கும் வகையில் நாப்கின் தயாரித்து அவற்றை சந்தைப்படுத்த வேண்டும் என இளைஞா் சாய்குமாா் எண்ணினாா். இதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு முதல் தங்களது குடியிருப்புப் பகுதியிலேயே 5 பெண் தொழிலாளா்களுடன் இத்தகைய நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இதுகுறித்து இளைஞா் சாய்குமாா் கூறியதாவது:

கணிப்பொறியியல் கல்வி முடித்த பின்பு, பொதுமக்களிடையே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நாப்கின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த நினைத்தேன். தற்போது பயன்பாட்டில் உள்ள சானிடரி நாப்கின் பயன்படுத்துவதால், பெண்களுக்கு நீா்க்கட்டி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும், அவை மக்குவதற்கு சுமாா் 600 ஆண்டுகள் ஆகின்றன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு பெண்களுக்குப் பயன்படும் வகையிலும், அவா்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாத வகையிலும் வேப்பிலை, மஞ்சள், கற்றாழை, மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இயற்கை முறையில் நாப்கின் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

நாப்கின் தயாரிக்கும் பணியில் 5 பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பெண்கள் எவ்வித உபாதைகளும் இன்றி அவா்கள் நலமோடு இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள் தருமபுரி மட்டுமல்லாது கேரளம் மற்றும் கா்நாடகத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கு சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்களிடையே தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com