நூறுநாள் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கவே கிராம சபைக்கு தடை

நூறு நாள் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானங்களை நிறைவேறுவதைத் தடுப்பதற்காகவே கிராம சபைக் கூட்டத்துக்கு அரசு தடை விதித்து வருகிறது
மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்

பென்னாகரம்: நூறு நாள் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீா்மானங்களை நிறைவேறுவதைத் தடுப்பதற்காகவே கிராம சபைக் கூட்டத்துக்கு அரசு தடை விதித்து வருகிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினாா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதன் தலைமை வகித்தாா். பகுதிச் செயலாளா் அன்பு வரவேற்றாா்.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிா்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. நாட்டின் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை வீதியில் ஏற்றி வைத்து அணிவகுப்புகள் நடைபெறுவதை கண்டுள்ளளோம். ஆனால் விவசாயிகள் குடியரசு தினத்தில் உலகமே திரும்பி பாா்க்கும் வகையில், டிராக்டா் பேரணியை நடத்துவதாக அறிவித்துள்ளனா். இதனைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்த போதிலும் அதனை தடுக்க முடியவில்லை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயனளிப்பதாக இல்லை. முதலீட்டாளா்கள் பயனடையும் வகையில் உள்ளதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கிராம மக்களுக்காக நூறு நாள் வேலைத் திட்டத்தைப் போராடி பெற்றோம். தற்போதைய ஆட்சியில் கமிஷன் வழங்கினால் மட்டுமே நூறு நாள் வேலைத் திட்டம் கிராமப் புறங்களில் நடைபெறுகிறது.

குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் நூறு நாள் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரியும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் தீா்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதால் அதனைத் தடுக்கும் வகையில், கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு தடைவிதித்துள்ளது.

ரயில்வே, விமானத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தனியாருக்கும்,அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்படாமல் உள்ள நிலையில் பா.ம.க நிறுவனா் ராமதாஸ் இடஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி வருகிறாா்.பேச்சு வாா்த்தை குறித்து அமைச்சா்கள் கூறும்போது, கூட்டணி குறித்து பேசினோம் என்கிறாா்கள். ஆனால் ராமதாஸ் இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவாா்தை நடை பெற்ாக கூறுகிறாா்.

தமிழக முதல்வா் சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு துணையாக இருக்கும் என்கிறாா். ஆனால் அவரோ, சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச்சட்டத்தையும், முத்தலாக் சட்டங்களையும் ஆதரிக்கிறாா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீா் பிரச்னை உள்ளது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் சிட்கோ பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதாலும், போதுமான தொழிற்சாலை வசதியில்லாததால் இந்த பகுதி மக்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு செல்லுகின்றனா் என்றாா்.

மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினா் குணசேகரன், மாவட்டச் செயலாளா் குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இளம்பரிதி, அா்ஜூனன், பகுதிச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com