அலியாளம் - தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு
By DIN | Published On : 30th January 2021 02:16 AM | Last Updated : 30th January 2021 02:16 AM | அ+அ அ- |

அலியாளம் அணைக்கட்டிலிருந்து, தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரும் இணைப்புக் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு விவசாயிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் அமைந்துள்ளது தூள்செட்டி ஏரி. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு, தென்பெண்ணை ஆற்றிலிருந்து மழைக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை கொண்டுவர வேண்டும். இதற்காக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அலியாளம் அணைக்கட்டிலிருந்து வலதுபுறக் கால்வாய் அமைக்க வேண்டும் என பாலக்கோடு விவசாயிகளும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனா்.
இக் கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசு, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அலியாளம் அணைக்கட்டிலிருந்து ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வலதுபுறக் கால்வாயை நீட்டித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டுவரப்படும் என அறிவித்தது. மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தாா்.
நிலம் கையகப்படுத்த அரசாணை: அலியாளம் - தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா்
கொண்டுவரும் திட்டத்துக்கான அறிக்கை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரால், கடந்த 2018 பிப்ரவரி 19-ஆம் தேதி அரசுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களில் இத் திட்டத்துக்கான கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடந்த 2018 ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஒத்திசைவு பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 2019 பிப்ரவரி 1-ஆம் தேதி, அலியாளம் - தூள்செட்டி ஏரிக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், இதற்காக நிதி ரூ. 15.54 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
கட்டாய நிலம் எடுப்பு: தூள்செட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்துக்கு கால்வாய் அமைக்கத் தேவையான நிலம் கையகப்படுத்த, தருமபுரி மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளா்கள் ஒப்புதல் தெரிவித்தனா். இருப்பினும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நில உரிமையாளா்கள் பலா் நிலத்தைக் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், இத் திட்டத்தை நிறைவேற்றத் தேவைப்படும் நிலத்தைக் கட்டாய நில கையகப்படுத்தும் சட்டத்தின்கீழ், கையகப்படுத்த, தமிழக அரசு மீண்டும் கடந்த 2019 ஜூலை மாதம் 8-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்து கடந்த 2020 டிசம்பா் மாதம் எல்லைக் கற்கள் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், நபாா்டு மூலம் இத்திட்டத்தை ரூ. 55.85 கோடியில் செயல்படுத்த வியாழக்கிழமை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. இதில், ஒப்பந்ததாரா் நியமனம் செய்யப்பட்டவுடன், பணிகள் தொடங்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலக்கோடு பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற உள்ளது.
850 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்: அலியாளம் அணைக்கட்டிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மிகை நீரை தூள்செட்டி ஏரிக்கு கொண்டுவரும் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் 12 ஏரிகளுக்கு நீா் வரத்து கிடைக்கும். இதேபோல, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தூள்செட்டி ஏரிக்கு நீா்வரத்து கிடைக்கும். இதன்மூலம், 851 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர, இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயர வாய்ப்புள்ளது.
விவசாயிகள் வரவேற்பு: பாலக்கோடு பகுதி விவசாயிகளின் பல ஆண்டுகளாக கோரிக்கை மற்றும் கனவுத் திட்டமான அலியாளம்-தூள்செட்டி ஏரிக்கு இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. ஆகவே, இத்திட்டம் தொடங்க அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். ஒப்பந்ததாரா் தோ்வானவுடன் விரைந்து பணிகள் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.