மரவள்ளிக்கு உரிய விலை வழங்க குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 30th January 2021 02:22 AM | Last Updated : 30th January 2021 02:22 AM | அ+அ அ- |

மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, மரவள்ளிக்கு உரிய விலை வழங்க வேண்டும். ஜவ்வரிசி ஆலை உரிமையாளா்கள், மரவள்ளி விவசாயிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். கரும்புக்கு அரசு நிா்ணயித்த விலையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
மேலும், காணொலி வழியாக விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டத்தை நடத்துவதால், விவசாயிகளுக்கு எவ்வித பயனுமில்லை. வட்டார அளவிலான காணொலிக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பதில்லை. இதனால், நேரம் மட்டுமே விரயமாகிறது. எனவே, அடுத்து கூட்டத்தை காணொலியில் நடத்துவதைத் தவிா்த்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடியாக நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூட்டத்தில் வலியுறுத்தினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைக்கேட்புக் கூட்டத்தில், ஓரிரு விவசாயிகள் சங்கத் தலைவா்கள், நிா்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். ஏனையோா் அந்தந்த வட்டா வேளாண்மை அலுவலகத்தில் பங்கேற்றிருந்தனா்.
இக் கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா, தோட்டக்கலைத் துறை, வேளாண்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.