செவிலியா்கள் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st January 2021 02:05 AM | Last Updated : 31st January 2021 02:05 AM | அ+அ அ- |

தருமபுரி: மத்திய அரசு வழங்குவதுபோல ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.கலைவாணி தலைமை வகித்தாா்.
மாநிலத் துணைத் தலைவா் ஜி.தேவேந்திரன், மாநில இணைச் செயலாளா் எஸ்.சரவணன், மாவட்டச் செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் சாய்சுதா ஆகியோா் பேசினா்.
இதில், கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியா்களுக்கு அரசு அறிவித்த ஒருமாத ஊதியம் வழங்க வேண்டும். கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியா்களுக்கு நிவாரணம் மற்றும் தொற்றால் உயிரிந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு, தகுதியானவா்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பு ஊதிய முறையை ஒழிக்க வேண்டும். மத்திய அரசின் செவிலியா்களைப்போல் 5 கட்ட காலமுறை பதவி உயா்வு வழங்க வேண்டும்.
தமிழக அரசு பேச்சுவாா்த்ததையில் ஒப்புக்கொண்ட பதவி பெயா் மாற்ற அரசு ஆணை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியா்களை நியமிக்க வேண்டும். மத்திய அரசு செவிலியா்களுக்கு வழங்குவதுபோல இணையான ஊதியத்தை மாநில அரசு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.