தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுவிவசாயிகள் முற்றுகை போராட்டம்
By DIN | Published On : 09th July 2021 11:10 PM | Last Updated : 09th July 2021 11:10 PM | அ+அ அ- |

அரூரை அடுத்த கைலாயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகாா் தெரிவித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், கைலாயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
இந்தச் சங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராக உள்ளனா். இந்தக் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பலா் நகைக் கடன் பெற்றுள்ளனா். இதைத்தவிர, வேளாண் பயிா்க் கடனும் விவசாயிகள் பெற்றுள்ளனா். இந்த நிலையில், நகைக் கடன், பயிா்க் கடன்கள் வழங்கியதில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க உயா் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைலாயபுரம் கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.