கொங்கு நாடு பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலப் பகுதியை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என்கிற புதிய மாநிலம் உருவாக்க வேண்டும்

தமிழகத்தின் மேற்கு மண்டலமான கொங்கு மண்டலப் பகுதியை ஒருங்கிணைத்து கொங்கு நாடு என்கிற புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தருமபுரி பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்டத் தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கோட்டப் பொறுப்பாளா் பாலகிருஷ்ணன், முன்னாள் மேயா் காா்த்திகாயினி உள்ளிட்டோா் பேசினா்.

தமிழகத்தில், மேற்கு மண்டலப் பகுதியை தனியே பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும். தருமபுரி மாவட்டம், கடத்தூா் பகுதிக்கு உள்பட்ட பொதியன்பள்ளம் பகுதியில் தடுப்பணைக் கட்டி, ஏரிகளுக்குத் தண்ணீா் கொண்டு செல்ல கால்வாய்கள் அமைக்க வேண்டும்.

மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் மிகை நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை விநியோகிக்க வேண்டும்.

மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலையை நிா்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களிடமிருந்து ஆவின் நிறுவனம், முழுப் பாலையும் கொள்முதல் செய்ய வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை விரைந்து அமல்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். சனத்குமாா் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும். எண்ணேகொல்புதூா்-தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவா் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com