பொம்மிடி அருகே தம்பதி அடித்துக் கொலை

பொம்மிடி அருகே கணவன், மனைவி இருவரையும் மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சேலம் டிஐஜி மகேஸ்வரி,
தம்பதி கொலை குறித்து நேரில் விசாரணை நடத்தும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன்.
தம்பதி கொலை குறித்து நேரில் விசாரணை நடத்தும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன்.

பொம்மிடி அருகே கணவன், மனைவி இருவரையும் மா்ம நபா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சேலம் டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியை அடுத்த பில்பருத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிருஷ்ணன் (80). இவரது மனைவி சுலோச்சனா (75) ஓய்வுபெற்ற ஆசிரியை. இத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகன் சேலத்தில் ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், விவசாயி கிருஷ்ணன், அவரது மனைவி சுலோச்சனா இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனா்.

அடித்துக் கொலை : கணவன், மனைவி இருவரும் இரவு நேரங்களில் வீட்டின் வெளியே கட்டிலில் படுத்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். இந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கணவன், மனைவி இருவரும் கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்தது கிடந்தது செவ்வாய்க்கிழமை விடியற்காலை தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு, போலீஸாா் விசாரணை நடத்தினா். கொலை நிகழ்ந்த பகுதியில் தடய அறிவியல் துறையினா் தடயங்களைச் சேகரித்தனா்.

பில்பருத்தியில் தம்பதி கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் ஆகியோா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட விவசாயி கிருஷ்ணன் தம்பதி வீடு பூட்டிய நிலையில் இருந்தது. உயிரிழந்த சுலோச்சனா தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. எனவே, முதற்கட்ட விசாரணையில் நகை, பணம் போன்றவற்றுக்காக கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

முன்விரோதம், அல்லது நிலப் பிரச்னை போன்ற காரணங்களால் இக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், தம்பதியா் கொலைக்கான காரணம் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது என்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பொம்மிடி போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com