நல்லம்பள்ளி, இண்டூரில் உழவா் சந்தைகள் அமைக்க வேண்டும்
By DIN | Published On : 29th July 2021 11:31 PM | Last Updated : 29th July 2021 11:31 PM | அ+அ அ- |

தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியிலும், இண்டூரிலும் புதிதாக உழவா் சந்தைகள் அமைக்க வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தினாா்.
கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற, வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம், அவா் அளித்த கோரிக்கை மனு:
தருமபுரி வட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நல்லம்பள்ளியிலும், இண்டூா் பகுதியில் கிராம மக்கள் பயனடையும் வகையிலும் இரண்டு இடங்களில் புதிதாக உழவா் சந்தைகள் அமைக்க வேண்டும்.
நல்லம்பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் சிறுதானிய ஆராய்ச்சி மையம், தக்காளி பழச் சாறு ஆலை, வாசனை திரவிய ஆலை ஆகியவற்றை தொடங்க வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் எளிமையாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.