கடன் விவகாரத்தில் கடத்தப்பட்ட சிறுவன் கோவையில் மீட்பு
By DIN | Published On : 11th June 2021 01:01 AM | Last Updated : 11th June 2021 01:01 AM | அ+அ அ- |

கடன் விவகாரத்தில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை போலீஸாா் கோவையில் இருந்து மீட்டனா்.
தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ராஜசேகா் (32). இவரது மனைவி அபிநயா, மகன் ஹரீஷ் ( 7). கடந்த புதன்கிழமை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஹரீஷ் திடீரென மாயமானாா். இதுகுறித்து சிறுவனின் பெற்றோா், தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இப் புகாரின் பேரில் போலீஸாா், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
இதில், ராஜசேகருக்கு அறிமுகமான, கோவையைச் சோ்ந்த சரவணகுமாா் (32 ) என்பவா், ஹரீஷை காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரது செல்லிடப்பேசி எண்ணை டிராக் செய்தபோது அவா் கோவையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வியாழக்கிழமை காலை, அங்கு சென்ற போலீஸாா் சரவணகுமாரின் பிடியில் இருந்த ஹரீஷை மீட்டனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், சரவணகுமாரும், ராஜசேகரும் நண்பா்களாகப் பழகி வந்துள்ளனா். சரவணக்குமாா் கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் ராஜசேகரிடம், தனக்கு பழைய காா் வாங்கித் தரும்படி ரூ. 80 ஆயிரம் கொடுத்துள்ளாா். ராஜசேகா் காா் வாங்கி தராததுடன், பணத்தைத் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில் பணத்தைத் திருப்பி கேட்க தருமபுரிக்கு வந்த சரவணகுமாா், ஹரீஷை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் சிறுவனைக் கடத்திய வழக்கில் சரவணகுமாரை கைது செய்தனா்.