பொது முடக்கத்தால் வருவாயிழந்த முடி திருத்தும் தொழிலாளா்கள்
By DIN | Published On : 11th June 2021 12:59 AM | Last Updated : 11th June 2021 12:59 AM | அ+அ அ- |

பொது முடக்கம் காரணமாக முடிதிருத்தும் சலூன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இத்தொழிலை நம்பியுள்ள முடிதிருத்தும் தொழிலாளா்கள் வருவாயையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அரசின் நிவாரணத்தை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பெரும்பாலை, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கடைகள் இயங்கி வந்தன. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முடிதிருத்தும் கடைகளைத் திறப்பதற்கான அனுமதியை அரசு இன்னும் வழங்கவில்லை.
தற்போது பால், காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைகள், சாலையோரக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகிறது.
ஆனால் முடிதிருத்தும் கடைகளுக்கு அனுமதியளிக்காததால், பென்னாகரம் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான முடிதிருத்தும் தொழிலாளா்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனா்.
கடந்த ஆண்டு பதிவு பெற்ற முடிதிருத்தும் தொழிலாளா் சங்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு முந்தைய தமிழக அரசு சாா்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் இந்தத் தொழிலாளா்களுக்கு முறையான நிவாரண தொகை, பொருள்கள் ஏதும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரம் இழந்த இந்தத் தொழிலாளா்கள் கிராமப்பகுதியிலும், சில நகா்ப் புறங்களிலும் திறந்த வெளியில் சிகை மற்றும் முக அலங்காரம் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளா்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டு கரோனா தொற்றின் முதல் அலையில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பதிவு பெற்ற முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. பென்னாகரம் பகுதிகளில் பதிவு பெறாத ஏராளமான தொழிலாளா்கள் உள்ள நிலையில் அவா்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.
எனவே, இம்முறை பணியிழந்து தவிக்கும் முடிதிருத்தும் அனைத்து தொழிலாளா்களையும் கணக்கெடுத்து நிவாரணத் தொகை வழங்கிட மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.