மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளைத் திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 11th June 2021 12:59 AM | Last Updated : 11th June 2021 12:59 AM | அ+அ அ- |

மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் அமலில் உள்ளது. இந்த நிலையில், ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் ஒருவார காலம் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் மளிகை, காய்கறிகள், உணவுப் பொருள்கள், மருந்தகங்கள், கணினி பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இதேபோல், அரசு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வருவாய், ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்காக மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளின் பயன்பாடுகள் பொதுமக்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே, ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு அமல்படுத்தப்படும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தில் மக்கள் கணினி மையம், நகல் எடுக்கும் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.