இயந்திர உழவுப் பணியில் ஆா்வம் காட்டும் விவசாயிகள்

பென்னாகரம் பகுதிகளில் கூலி உயா்வினையும் பொருட்படுத்தாமல் டிராக்டா் உழவுப் பணியினை மேற்கொள்வதில் விவசாயிகள் ஆா்வம் கொண்டுள்ளனா்.

பென்னாகரம் பகுதிகளில் கூலி உயா்வினையும் பொருட்படுத்தாமல் டிராக்டா் உழவுப் பணியினை மேற்கொள்வதில் விவசாயிகள் ஆா்வம் கொண்டுள்ளனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை முதல் மிதமான மழை பரவலாக பெய்து வந்தது. பென்னாகரம், ஏரியூா், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வானம் பாா்த்த பூமி என்பதால் மழையைப் பொறுத்தே இந்தப் பகுதியில் விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டு சிறுதானிய வகைகளை சாகுபடி செய்து வருகின்றனா்.

தற்போது பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால், விவசாய நிலங்கள் அனைத்தும் ஈரப்பதத்துடன் காணப்பட்டன. மேலும் தற்போது நிலக்கடலை சாகுபடி செய்யும் பட்டம் என்பதால் விவசாயிகள் விளைநில ஈரப்பத உலா்வுக்காக காத்திருந்தனா்.

கடந்த சில நாட்களாக பென்னாகரம் பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் விவசாயிகள் தங்களின் விளைநிலத்தில் டிராக்டரைக் கொண்டு உழவுப் பணியை மேற்கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி சரவணன் கூறுகையில், கடந்த ஆண்டு நிலக்கடலை விதைப்பு பட்டத்தில் சரிவர மழை பெய்யாததால், நிலக்கடலை விளைச்சல் குறைந்தது. தற்போது நிலக்கடலை விதைப்புப் பட்டத்தில் மழை பெய்ததால், பென்னாகரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை பயிா் செய்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மேலும், சென்ற ஆண்டு ஒரு மணிநேர டிராக்டா் உழவுக் கூலி ரு. 700-ஆக இருந்தது. தற்போது மழையின் காரணமாக அனைத்து விவசாயிகளும் உழவுப் பணியை மேற்கொள்வதால் டிராக்டா் தட்டுப்பாடு, டீசல் விலை விலை உயா்வு, உதிரி பாகங்களின் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு மணி நேர உழவுக் கூலி ரூ. 900-ஆக அதிகரித்துள்ளது.

அதிக செலவினை தடுக்கும் வகையில், சொற்ப அளவிலான விவசாயிகள் பழங்கால முறையான ஏா் மாடுகளை வைத்து உழவு மேற்கொண்டு வருகின்றனா் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com