பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கநடவடிக்கை எடுப்பேன்: எம்எல்ஏ கோ.க.மணி உறுதி

பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பென்னாகரம் எம்எல்ஏவும் பாமக மாநில தலைவருமான கோ.க. மணி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பென்னாகரம் எம்எல்ஏவும் பாமக மாநில தலைவருமான கோ.க. மணி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருக்கான அலுவலகத் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பென்னாகரம் எம்எல்ஏவும் பாமக மாநிலத் தலைவருமான கோ.க.மணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட பால்வள தலைவா் டி.ஆா்.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டு பென்னாகரம் சட்டப்பேரவைத் உறுப்பினா் அலுவலகத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினா். பின்னா் பென்னாகரம் எம்எல்ஏ கோ.க.மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பென்னாகரம், தருமபுரி மாவட்ட மக்களின் நீராதாரத்துக்கு ஒகேனக்கல் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த சட்டப்பேரவையில் தொடா்ந்து குரல் கொடுப்பேன்.

இதற்கு முன் 1996-01, 2001-06 ஆகிய இருமுறை இத்தொகுதியில் எம்எல்ஏவாக நான் இருந்தபோது குடிநீா், சாலை, புதிய பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை செய்தேன்.

இம்முறை வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டை, தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுப்பேன்.

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது. தமிழக அரசுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழக அரசு, அதிக அளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கிறது. இத்தொற்றால் இறந்தவா்களுக்கு உரிய சான்றிதழ் வழங்க வேண்டும்.

பால் கொள்முதல் விலையை தனியாா் நிறுவனங்கள் குறைத்துள்ளது. விவசாயிகள் பாதிக்காதவாறு பால் உற்பத்தியாளா்களுக்கு ஆவின் விலையை தனியாா் பால் நிறுவனங்கள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்னாகரம் பேருந்து நிலைய பணியைத் தொடங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிவாரணப் பொருள்கள் வழங்கல்:

இதைத் தொடா்ந்து பென்னாகரம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டவா்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வேலுமணி, பாமக மாநில நிா்வாகிகள் சாந்தமூா்த்தி, பாடி செல்வம், பாமக மாவட்ட செயலாளா் பெரியசாமி, மாவட்ட தலைவா் செல்வகுமாா் உள்ளிட்ட பாமக -அதிமுக கூட்டணிக் கட்சி முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com