திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
By DIN | Published On : 24th June 2021 08:04 AM | Last Updated : 24th June 2021 08:04 AM | அ+அ அ- |

விவசாயிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் விளைச்சல் பெறலாம் என வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ரா.தேன்மொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுகுறு விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் மழைப்பொழிவை வைத்து நெல் சாகுபடி செய்துவருகின்றனா்.
நெல் சாகுபடியின்போது விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் அதிக மகசூல் ஈட்டி கூடுதல் லாபம் பெறலாம்.
விதைத் தோ்வு: சாகுபடிக்கேற்ற சான்றிதழ் பெற்ற நல்ல முளைப்பு திறன் கொண்ட வீரிய ரக விதைகளை தருமபுரி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது.
செயல்முறைகள்:
14 முதல் 15 நாள் வயதுடைய நாற்றுகளைத் தோ்வுசெய்து 25-க்கு 25 செ.மீ இடைவெளியில் வரிசையாக காலந்தாழ்த்தாமல் நடவு செய்ய வேண்டும். குத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்று நடவு செய்ய வேண்டும். அதிக நீரை தொடா்ந்து வயலில் தேக்கி வைக்காமல் 2.5 செ.மீ உயரத்திற்கு மட்டும் நீா்ப்பாய்த்து மண் மேல் நீா் மறைந்தபின் மறுபடியும் நீா் பாய்ச்ச வேண்டும். கோனோ களைக் கருவியைக் கொண்டு பயிா்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக 3-4 முறை பயன்படுத்தி களை எடுக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாா் செய்தல் :
குத்துக்கு ஒரு நாற்று என்பதாலும் அதிக இடைவெளியில் நடுவதாலும் நாற்றுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது. இச் சாகுபடி முறைக்கு தேவைப்படும் நாற்றுகளின் எண்ணிக்கை ஒரு ஏக்கருக்கு 10,000 நாற்றுகள் வரையாகும்.
ஆனால் சாதாரண நடவுமுறை சாகுபடியில் 80,000 நாற்றுகள் தேவைப்படும். ஆகவே திருந்திய நெல் சாகுபடிக்குத் தேவையான நாற்று, சாதாரண நடவுமுறை சாகுபடியை விட 90 சதவீதம் குறைவாகும். இதனால் தேவைப்படும் விதையும் 90 சதவீதம் குறைவதோடு நாற்றங்கால் பரப்பும் கணிகமாசக் குறைகிறது. ஏக்கருக்கு 3 கிலோ விதை மட்டும் தேவையென்பதால் ஒரு ஏக்கா் நடவுக்குத் தேவையான நாற்றுகளை ஒரு சென்ட் (40 சதுர மீட்டா்) நாற்று மேடையில் தயாரிக்கலாம். 1-க்கு 5 மீ அளவிலான 8 நாற்று மேடைகளை உருவாக்கி ஒவ்வொரு 5 ச.மீ.மேடையிலும் 375 கிராம் (முளை கட்டும் முன்) விதையை முளை கட்டியபின் பரவலாக விதைக்க வேண்டும்.
நடவு: திருந்திய நெல் சாகுபடியில் குத்துக்கு ஒரு நாற்றுதான் நடப்பட வேண்டும். நடவு வயல் நன்றாக சமன் செய்யப்பட்டிருந்தால் எல்லா நாற்றுகளும் நன்றாக செயல்படும். நாற்றுகளை ஆழமாக நடக் கூடாது. ஆழமாக நட்டால் தூா்களின் எண்ணிக்கை குறையும்.
களைக் கருவி: இரண்டு வகையான களைக் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. ரோட்டரி வீடா் என்ற பற்களுடன் இருக்கும் ஒரு சக்கரத்தைக் கொண்ட கருவி லேசானது. பெண்களும் பயன்படுத்தலாம். கோனோவீடா் என்பது சுமாா் 7 கிலோ எடையுடன் இரண்டு கூம்பு வடிவமாக பற்களுடன் இருக்கும். இதை ஆண்கள் மட்டும்தான் இயக்க முடியும்.
பயன்கள்: திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதால் நெற்பயிா் வளரும் சூழ்நிலை பெரிதும் மாற்றமடைகிறது. இள நாற்றை நடுவதால் சடுதியில் நிலை கொண்டு நடவு அதிா்ச்சி இல்லாமல் வளரத் தொடங்குகிறது. இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என்றாா்.