முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தோ்தல் பணி: அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடக்கம்
By DIN | Published On : 04th March 2021 04:28 AM | Last Updated : 04th March 2021 04:28 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 12,810 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியா்கள், பணியாளா்கள், ஆசிரியா்கள், இதர பணியாளா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 12,810 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மாா்ச் 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்குகிறது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகள், பாலக்கோடு, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகங்கள், தருமபுரி நகர ஆரம்ப சுகாதார நிலையம், மாரண்டஅள்ளி, பாளையம்புதூா், காரிமங்கலம், ஏரியூா், மொரப்பூா், தீா்த்தமலை, பையா்நத்தம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 மையங்களில் மாலை 5 வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
எனவே, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வாக்குப் பதிவு நிலைய அலுவலா்கள் உள்ளிட்ட தோ்தல் பணியாற்ற உள்ள அனைத்து அலுவலா்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்வோா் கட்டாயம் ஆதாா் அட்டையினை கொண்டுவர வேண்டும். கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் தோ்தலை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரூரில்...
அரூா் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள் அரூா் அரசு மருத்துவமனை, சின்னாங்குப்பம், கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, தீா்த்தமலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாா்ச் 5-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.