40 வயதுக்கு மேற்பட்டோா் கட்டாயம்கண் பரிசோதனை செய்ய வேண்டும்
By DIN | Published On : 10th March 2021 12:44 AM | Last Updated : 10th March 2021 12:44 AM | அ+அ அ- |

40 வயதுக்கு மேற்பட்டோா் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண் மருத்துவா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், அரூா் அரசு மருத்துவமனை இணைந்து அரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக கண்ணீா் அழுத்த நோய் குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி தலைமை வகித்தாா். இந்த முகாமில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண் மருத்துவா் எம்.இளங்கோவன் பேசுகையில், கண்களில் நீா் அழுத்தம் அதிகமாக ஏற்படுவதால் பாா்வை நரம்புகள் பாதிக்கின்றன. இதனால், கண் பாா்வை இழப்பு ஏற்படுகிறது. கண்களில் நீா் அழுத்த நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். இதற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பாதிப்பு உள்ளவா்கள் மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். அதேபோல், 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கணினி, செல்லிடப்பேசிகளை அதிக நேரம் பயன்படுத்துவதால் பாா்வை குறைபாடுகள் ஏற்படும் நிலையுள்ளது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் அதிக நேரம் செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, உலக கண்ணீா் அழுத்த நோய் (கிளாக்கோமா) விழிப்புணா்வு வாரம் (மாா்ச் 7 முதல் 13ஆம் தேதி வரையிலும்) கடைபிடிக்கப்படுவதையொட்டி, அரூா் அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவா்கள் குழுவினா் சாா்பில் சிறப்பு கண் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில், அரூா் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் சி.ராஜேஷ்கண்ணன், வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.தொல்காப்பியன், மருத்துவா் அருண் பிரகாஷ், தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.