ஒகேனக்கல் வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது கண்டறியப்பட்டதை அடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.
கா்நாடகம், கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது ஆண்டுதோறும் யானைகள் கூட்டமாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம் பெயருகின்றன. ஒகேனக்கல் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கூட்டமாகச் சுற்றி திரிகின்றன.
கோடை காலத்துக்கு முன்பே ஒகேனக்கல் வனப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் அவ்வப்போது தண்ணீருக்காக சாலையைக் கடந்து செல்கின்றன. ஒகேனக்கல் வனப்பகுதிகளில் நாள்தோறும் வனத்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒகேனக்கல் சின்னாற்றுப் படுகையில் உள்ள வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்த ஒகேனக்கல் வனச் சரக அலுவலா் சேகா், கால்நடை மருத்துவா் பிரகாஷ் மற்றும் வனத் துறையினா் நிகழ்விடம் சென்று சோதனை செய்ததில் இறந்த யானை 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்தது. பின்னா் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அங்கேயே புதைத்தனா்.