அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
பாலக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பாலக்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு அரணாக விளங்குகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாக திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல ஆண்டு காலம் பதவியில் இருந்த திமுக-வினரால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது போல திமுகவினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்லாமியருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை உயர்த்தி வழங்க எங்களிடம் இஸ்லாமியர்கள் கோரிக்கை வைத்தனர். இதையொட்டி ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ. 6 கோடி என்பதை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளோம். ஹஜ் புனித பயணம் செல்பவர்களுக்கு சென்னையிலே தங்குமிட வசதி வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் ரூ.15 கோடி மதிப்பில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளிவாசல்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  ரம்ஜான் கொண்டாடும் வகையில் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நாகூர் தர்கா சந்தனக் கூடு திருவிழாவுக்கு ஆண்டுதோறும் சந்தனக் கட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாகூர் தர்காவில் உள்ள குளக்கரையை சீரமைப்பு பணி மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல எண்ணற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் சிறுபான்மை மக்களிடையே அதிமுக-வினர் ஒற்றுமையோடு இருப்பதை கண்டு அதனை சீர் குலைக்க திமுக முயற்சித்து வருகிறது. 

அதிமுக என்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார். எதிர்க்கட்சியினரை குறைத்து மதிப்பிட்டு பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய நடவடிக்கைகளை கைவிட்டு மாற்று கட்சியினருக்கு ஸ்டாலின் மதிப்பளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் திமுக எதிர்க்கட்சியாக வர ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும். இந்த தேர்தலில் திமுக-விற்கு மக்கள் மூடுவிழா எடுக்க வேண்டும். இந்த தேர்தலில் திமுக-விற்கு இறுதி தேர்தலாக அமைய வேண்டும்.

பத்தாண்டு காலம் பதவியில் இல்லாததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். ஸ்டாலினுடைய முதல்வர் கனவு கானல் நீராகும். தொடர்ந்து பொய்கள் பேசி மக்களை குழப்பி அதில் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மக்கள் ஆதரவோடு அவருடைய முயற்சியை முறியடிப்போம். அதிமுக ஒரு ஜனநாயக கட்சி இங்கு சாதாரண தொண்டனும் முதல்வர் பதவியை வகிக்க முடியும். உழைப்பவர்கள் இந்த கட்சியில் ஏற்றம் அடையலாம். ஆகவே இந்த தேர்தலில் மக்கள் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து மீண்டும் அதிமுக அரசு அமைய பேராதரவு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

இதேபோல பாலக்கோடு தொகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்கள், கலைக் கல்லூரிகள் தொடக்கம் என ஏராளமான நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்த தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வாக்களித்து இப்பகுதி மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com