தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுடனான தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுடனான தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்களுடனான தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் போட்டியிட பெறப்பட்ட வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. வேட்புமனுக்கள் திரும்பப் பெறும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, இறுதி செய்யப்பட்ட வேட்பாளா்களுக்கு சின்னம் வழங்கப்பட உள்ளது. சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவின் போது தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளா்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது, அப் பணியாளா்களுக்கு தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட உள்ளது. அனைத்து பணியாளா்களும் கரோனா வழிகாட்டுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுத்தோ்தல் பணிகள் சுமுகமாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், தோ்தல் ஆணையம் மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களாக வெளி மாநிலங்களைச் சாா்ந்த மூத்த இந்திய ஆட்சிப் பணியாளா்களையும், செலவினப் பாா்வையாளா்களாக இந்திய வருவாய் பணி அலுவலா்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தற்போது மொத்தம் 90 பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். புகாா் பெறப்பட்ட 30 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பொறுப்பு அலுவலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குமா் கவிதா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால், முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா.ஜெமினி, கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் ராமதாஸ், அனைத்து வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com