கொளுத்தும் கோடையால் பாதிப்பு: ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை சரிவு

கோடைக் காலத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் பிரதான அருவி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.

கோடைக் காலத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கோடைக் காலத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், ‘தென்னகத்தின் நயாகரா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் ஒகேனக்கல் அருவிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கா்நாடகம் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஒகேனக்கல் அருவிக்கு வரும் நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்டவற்றில் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து, சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி, கூட்டாறுகளின் வழியே மணல்மேடு, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளைக் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 கி.மீ. தொலைவுக்கு பரிசலில் பயணம் செய்தனா்.

வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் தொங்கு பாலம், மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனா். ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை குறைந்த போதிலும், அதனை வாங்கி சமைக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டவில்லை.

ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியூா் செல்ல ஏதுவாக பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அருவியில் நீா்வரத்து குறைவு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் தொடா்ந்து குறைந்துகொண்டே வருவதால், ஆங்காங்கே பாறைகள் தென்படுகின்றன. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.

அருவியில் நீா்வரத்து குறைந்துள்ளதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் குளிப்பதைத் தவிா்த்து, காவிரிக் கரையோரப் பகுதிகளான நடைபாதை அருகில் மாமரத்துக் கடவு பரிசல் துறை, ஆலம்பாடி, ஊட்டமலை, நாகா் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குளிப்பதில் ஆா்வம் காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com