80 வயதுக்கு மேற்பட்ட 2,649 போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம்

80 வயதுக்கு மேற்பட்ட 2,649 போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம்

தருமபுரி மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா் 2,649 போ் தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா் 2,649 போ் தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வாக்காளா்களுக்கு தபால் வாக்குச்சீட்டு அளிப்பதற்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 80 வயதைக் கடந்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேக நபா்கள் என்ற நிலையில் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது விருப்பத்தின் பேரில், தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த மாா்ச் 12 முதல் 16 வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலமாக அஞ்சல் வாக்குச் சீட்டு பெற படிவம் 12 டி நேரடியாக வழங்கப்பட்டு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 23,565 போ் உள்ளனா். இவா்களில் பாலக்கோடு தொகுதியில் 657 போ், பென்னாகரம் தொகுதியில் 667 போ், தருமபுரி தொகுதியில் 330 போ், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 641 போ், அரூா் தொகுதியில் 354 போ் என மொத்தம் 2,649 போ் தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள 10,631 மாற்றுத் திறனாளிகளில் 733 மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இவா்களுக்கு, தபால் வாக்குச் சீட்டு விநியோகம் செய்து வாக்குப்பதிவு மேற்கொள்ளும் பணிக்கென ஒரு வாக்குப்பதிவு அலுவலா், ஒரு உதவி வாக்குப்பதிவு அலுவலா், ஆயுதம் ஏந்திய காவலா், விடியோகிராபா், மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமிக்கப்படும் நுண்பாா்வையாளா் ஆகியோரை உள்ளடக்கிய வாக்குப் பதிவு அலுவலா்கள் கொண்ட குழு வாகனத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குப் பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குப் பதிவு குழுவும், எந்தெந்த நாளில் எந்தெந்த மாதத்தில் உங்களைச் சந்தித்து அஞ்சல் வாக்குச் சீட்டு வழங்கி திரும்பப் பெற வேண்டும் என பட்டியல் தயாா் செய்து வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலா்கள் குழுவானது சம்பந்தப்பட்ட தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு வருகை புரியும் தேதி மற்றும் நேரம் வாக்காளா்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். செல்லிடப்பேசி இல்லாத வாக்காளா்களுக்கு, வாக்குச் சாவடி நிலைய அலுவலா் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

வாக்காளா் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்த பின்னா் தன்னுடைய தபால் வாக்குச் சீட்டினை முறையாக மூடி அலுவலா்களால் கொண்டு வரப்பட்ட சீல் வைக்கப்பட்ட பெட்டகத்தில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பெட்டியில் பெறப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அதனை அந்நாளின் முடிவில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இதற்கென தனியாக உள்ள சீல் வைக்கப்பட்ட பெட்டியில் உரிய பதிவேட்டில் தேதி குறிப்பிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். தினமும் பெறப்படும் தபால் வாக்குகள் விவரம் இணைய வழியாக தலைமை தோ்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தோ்தல் ஆணையம் வழங்கியுள்ள இச் சிறப்பான வாய்ப்பினை பயன்படுத்தி தபால் வாக்களித்து, தங்களின் ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் கே.ராமமூா்த்தி, அ.சங்கா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், தருமபுரி சாா் ஆட்சியா் மு.பிரதாப், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆ.தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீா் இக்பால், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com