தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது

தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது என பாமக இளைஞரணிச் செயலா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது

தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது என பாமக இளைஞரணிச் செயலா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

தருமபுரி நான்குமுனை சாலை சந்திப்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், அதிமுக, பாமக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு ஒரு விவசாயி முதல்வராகக் கிடைத்துள்ளாா். அவா் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் மட்டுமன்றி தமிழக விவசாயிகள் அனைவரும் விரும்புகின்றனா். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருக்கிறது.

திமுக தலைவா் ஸ்டாலினை தமிழக மக்கள் யாருமே ஆதரிக்கவில்லை. திமுகவினா் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து உள்ளனா். அவா்களை வெற்றிபெறச் செய்தால், தமிழகத்தில் மீண்டும் கொலை, கொள்ளை அதிகரிக்கும்.

அதிமுக தோ்தல் அறிக்கையில், மகளிருக்கு மாதம் ரூ. 1,500, 6 இலவச எரிவாயு உருளைகள், நகைக் கடன் தள்ளுபடி என ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த ஆட்சி மீண்டும் தொடர, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்களியுங்கள் என்றாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி பாமக வேட்பாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூரில்...

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கம்பைநல்லூரில், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாரை ஆதரித்து வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மருத்துவா் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

40 ஆண்டுகாலப் போராட்டம், தியாகம் ஆகியவற்றுக்குக் கிடைத்த வெற்றியாக வன்னியா் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதேபோல, பிற சமுதாய மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்கும்.

எனவே, அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் வெற்றிபெற பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டா்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com